இஸ்லாத்திற்கும் தீவிரவாதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ‘அஹிம்சை வன்முறை’ எனும் சொற்சேர்க்கை தவறாக இருப்பதைப் போலவே ‘இஸ்லாமிய வன்முறை’ எனும் சொல்லாடலும் தவறானதே. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இஸ்லாமிய வரலாற்றில் சில மார்க்க அறிஞர்களால் இஸ்லாத்திற்கு வழங்கப்பட்ட அரசியல் விளக்கத்தின் விளைவாக அதன் உண்மையான முகம் சிதைந்துபோனது. இந்நிலையில் இஸ்லாத்தினுடைய உண்மையான முகம் என்ன என்பதை விளக்க வேண்டியது அவசியமாகிறது.
மூதறிஞர் மவ்லானா வஹீதுத்தீன் கான் (1925-2௦21) அவர்கள் இந்நூலில் இஸ்லாத்தின் மூலாதாரமான திருக்குர்ஆன்- நபிமொழி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சிறு சிறு கட்டுரைகளாகப் பல்வேறு கோணங்களில் ‘இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்’ என்பதை அறிவுபூர்வமாக நிறுவுகிறார். மட்டுமின்றி தனி மனித வாழ்விலும் சமூக வாழ்விலும் அமைதியின் முக்கியத்துவம் எவ்வளவு மகத்தானது என்பதையும் தக்க உதாரணங்களைக் கொண்டு விளக்குகிறார். இந்தக் கட்டுரைகளை வாசித்த பிறகு இஸ்லாமியப் பண்பாட்டை ஒற்றை வரியில் ‘அமைதிப் பண்பாடு’ என்று சொல்வதில் யாருக்கும் தாமதம் ஏற்பட வாய்ப்பில்லை.
மவ்லானா அவர்கள் ‘இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்’ என்ற கருத்தாக்கத்தைத் தர்க்க ரீதியாக நிறுவும் வண்ணமாக உருதுவிலும் ஆங்கிலத்திலும் எண்ணற்ற நூல்களை எழுதியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அந்த நூல்கள் முஸ்லிம்களிடையே மனத்தெளிவை ஏற்படுத்தியது மட்டுமின்றி இஸ்லாத்தின் உண்மையான கோட்பாடு குறித்து உலக மக்களிடையே நிலவும் வினாக்களுக்கு விடையும் அளித்திருக்கின்றன.